திதிநித்யா தேவியர் வழிபாடு-3: உங்கள் விருப்பம் நிறைவேற பிரதமையில் இந்த தேவியை வழிபடுங்கள்!
தன்னை மறந்து சகல உலகினையும்
மன்ன நிதங்காக்கும் மஹாசக்தி - அன்னை
அவளே துணையென்று அனவரதம் நெஞ்சம்
துவளாது இருத்தல் சுகம்
(மஹா சக்தி வெண்பா - மஹாகவி பாரதியார்)
மம் எனில் நல்ல ஆசைகள். ஈச்வரீ' என்றால் ஆள்பவள். இவ்வுலகம் அன்னையின் ஸங்கல்பத்தினால் தோன்றியது. நாம் அனைவரும் அந்த சக்தி யின் குழந்தைகள். நம்முடைய தேவைகளை நிறைவேற்றுவது அன்னையின் கடமை அல்லவா? அவள் பராசக்தி. அனைத்தையும் செய்யக்கூடிய ஆற்றல் படைத்தவள்.
ஸ்ரீகாமேச்வரி நித்யா - இந்த சக்தியே திதி நித்யா பூஜை வரிசையில் முதலாவதாக போற்றப்படுகிறாள். வளர்பிறை ப்ரதமை திதியில் இந்த அன்னையை ஓம் காமேச்வர்யை நம:’ என்று 16 முறை ஜெபித்து அருள் பெறலாம்.
அன்னையின் இருப்பிடமான ஸ்ரீசக்கரத்தில் இரண்டாவது ஆவரணம் சர்வாசாபரிபூரக சக்கரம்’ என்று போற்றப் படுகிறது.
ஸர்வ' என்றால் அனைத்து விதமான’ எனப் பொருள். ஆசா - ஆசைகள்; பரிபூரக - பூர்த்தி ஆகக்கூடிய...; சக்கரம் - இடம். ஆக, சர்வாசாபரிபூரக சக்கரம் எனும் இந்த ஸ்தானம் நம்முடைய அனைத்துவித தார்மீகமான ஆசைகளையும் நிறைவேற்றக்கூடிய சக்தி படைத்தது.
நமக்கு எந்தப் பொருள் வேண்டுமோ, அதை அது இருக்கும் இடத்தில் தேடினால்தான் கிடைக் கும். வைத்த இடம் வேறாகவும் தேடும் இடம் வேறாகவும் இருந்தால், அந்தப் பொருளை நாம் எப்போது அடைவது? இயலாது அல்லவா!
நம் முன்னோர்கள் மிகவும் புத்திசாலிகள். மூத்தோர் சொல் அம்ருதம்’ என்றபடி, நம் முன்னோர்களான ரிஷிகள் நமக்கு அருளிய நல்வழிகளில் ஒன்றே இந்தப் பூஜா முறைகள்.
நியமப்படி பூஜை செய்பவர்கள், ஸ்ரீசக்கரத்தில் குறிப்பிட்ட ஸ்தானத்தில் அருளும் இந்த அன்னையை வழிபடலாம். மற்றவர்கள், இயற்கையில் நம் கண்களாக விளங்கக்கூடிய சந்திர சூரியர்களை வழிபட்டு பயன்பெறலாம்.
ஸ்ரீகாமேச்வரி நித்யா எனும் இந்த தேவியானவள், நாம் அன்றாடம் கண்டு மகிழும் சந்திரனில் அருள்பாலிக்கிறாள். ஆக, சந்திர தரிசனமும் வணக்கமும் இந்த சக்தியை வழிபடுவதற்கான எளிய முறையாகும். வளர்பிறை ப்ரதமை திதியில் வழிபட்டு அருள்பெறலாம். இந்த வழிபாடு அனைவருக்கும் சாத்தியமானதே. நாமும் முயற்சி செய்தோமானால், எளியவகையில் இந்தப் பிரபஞ்ச சக்தியை உணரலாம்.
ஸ்ரீசக்கரத்தில் இந்த 2-வது ஆவரணத்தில் அருளும் 16 தேவியர் - இதற்குரிய நித்யா தேவியர் பற்றிய விவரங்கள், வழிபாட்டுத் தியான முறைகள், பலன்கள் போன்றவை விரிவாக விளக்கப்பட்டுள்ளன.அந்த வகையில், இதில் முதல் தேவியாக காமாகர்ஷிணி தேவி விளங்குகிறாள். நித்யா தேவியாக காமேச்வரீ போற்றப்படுகிறாள். இவர்களை வழிபடுவதன் மூலம் மனம் தூய்மை அடைந்து நம்முடைய ஆசைகள் - விருப்பங்கள் யாவும் நிறைவேறும்.
எப்படி வழிபடுவது?
வளர்பிறை ப்ரதமை திதி அன்றும், அமாவாசை தினம் அன்றும் இந்த அன்னையை வழிபட்டு அருள் பெறலாம்.
ஸ்ரீகாமேச்வரி நித்யாதேவியை சந்திரனில் கண்டு வணங்க வேண்டும் என்று பார்த்தோம் அல்லவா? அதன்படி, சந்திரனை வணங்கி, கண்களைமூடிக்கொண்டு, தியான ஸ்லோகத்தில் கூறியபடி அம்பாளின் திருவுருவை மனதில் தியானித்து, `ஓம் காமேச்வர்யை நம’ என்ற மந்திரத்தைக் கூறி வணங்கவேண்டும்.
பின்னர்...
ஓம் காமேச்வர்யை வித்மஹே
நித்ய க்லின்னாயை தீமஹி
தந்நோ நித்யா ப்ரசோதயாத் II
என்ற காயத்ரி மந்திரத்தை ஜபிக்க வேண்டும். இது, அன்னையின் அருளை பெற எளிமையான வழியாகும்.
கிடைக்கும் பலன்கள்: ஸ்ரீகாமேச்வரீ நித்யாவை வழிபடுவதால் மன அமைதி, குடும்பத்தில் ஒற்றுமை, ஆரோக்கியமான வாழ்வு கிடைக்கும். நாம் விரும்பிப் பிரார்த்திக்கும் அனைத்து வேண்டுதல்களும் நிறைவேறும்.
ஸ்ரீகாமேச்வரீ நித்யா தியானம்:
பாலார்க கோடி ஸங்காசாம்
மாணிக்ய முகுடோஜ்ஜ்வலாம் I
ஹார - க்ரைவேய காஞ்சீபி:
ஊர்மிகா நூபுராதிபி: II
மண்டிதாம் ரக்த வஸனாம்
ரத்னாபரண சோபிதாம் I
ஷட்புஜாம் த்ரீக்ஷணாம்
இந்து கலாகலித மௌலிகாம் II
பஞ்ச அஷ்ட ஷோடச த்வந்த்வ
ஷட்கோண சதுரஸ்ரகாம் I
மந்தஸ்மிதோல்லஸத் வக்த்ராம்
தயா மன்தர வீக்ஷணாம் II
பாச அங்குசௌச ச புண்ட்ர இக்ஷு
சாபம் புஷ்ப சிலீமுகம் I
ரத்னபாத்ரம் ஸுதாபூர்ணம் வரதம்
பிப்ரதீம் கரை: II
கருத்து: கோடி இளம் சூரியர்களின் காந்தியை உடையவளும், மாணிக்கக் கிரீடம் அணிந்தவளும், கழுத்தில் அணியக்கூடிய ஹாரம் போன்ற தனது அங்கங்களில் பலவித ஆபரணங்களை தரித்து இருப்பவளும், சிவப்பு நிற ஆடை உடுத்தியவளும், ஆறு கைகளையும் மூன்று கண்களையும் உடையவளும், தலையில் சந்திர னைத் தரித்தவளுமாகிய காமேச்வரீ நித்யாவை வணங்குகிறேன்.
ஐந்து எட்டு இரண்டு பதினாறு இதழ் தாமரைகள்... அறுகோணம், நாற்கோணம் ஆகிய அமைப்பில் இருக்கும் யந்திரத்தில் வீற்றிருந்து அருளும் அன்னையே!
மென்மையான புன்னகையும் கருணை நிறைந்த பார்வையும் கொண்டு, வலக் கைகளில் ஐந்து பாணங்கள், அங்குசம், அமிர்தம் நிறைந்த ரத்தினக் கலசம் திகழ, இடக்கரங்களில் கரும்பு வில், பாசம் மற்றும் வரத முத்திரையுடனும் காட்சி தரும் அன்னையே..!
அனைத்துவித தர்மமான ஆசைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய சக்தியாக விளங்கக்கூடிய ஸ்ரீகாமேச்வரீ நித்யாதேவியே தங்களை வணங்குகிறேன். இவ்விதம், மேற்காணும் தியான ஸ்லோகம் ஸ்ரீகாமேச்வரி நித்யா தேவியின் திருவுருவைச் சித்திரிக்கின்றது.
No comments:
Post a Comment